வியாழன், 10 மார்ச், 2011

யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்: முரளிதரன்


யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்: முரளிதரன்
Karuna3_1புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் சிலர் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இந்த மக்களின் மேலதிக தேவைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 



புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினமும் இன்றைய தினமும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், தன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்ற முஸ்லிம் மக்களை நேரடியாக சந்தித்து முடியவில்;லை. இருப்பினும் தமது அமைச்சுப் பிரதிநிதிகளை அனுப்பிவைத்து அம்மக்களின் தேவைப்பாடுகளை கேட்டறியவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, யாழ். பொம்மைவெளி பகுதியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மீளகுடியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எனினும் மத்திய அரசின் அனுதியின்றி தன்னால் எதுவும் மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.

குறித்த உண்ணாவிரதம் தொடர்பில் மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். அதன் பிரதிகளை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும் அனுப்பியுள்ளேன் என இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் தொடர்பில் குறித்த பிரதேச செயலாளர் தனக்கு எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. உண்ணாவிரதம் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்து கொண்டேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து பொம்மைவெளி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.